
துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது
கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது உரிமம் இன்றி கைவசம் வைத்திருந்த 12 போர் துப்பாக்கி (Bore-12), ரைபிள் (Rifle) துப்பாக்கி ஒன்று, 15 தோட்டாக்கள் (Bore-12), 02 ரைபிள் தோட்டாக்கள், ஒரு மெகசின் மற்றும் 7.62 மில்லிமீற்றர் அளவிலான 50 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் கடுவலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
