சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களை மூட வேண்டிய நிலை!

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஓயில் கோர்பரேஷன் நிறுவனம் (IOCL) அறிவித்துள்ளது.

இதனால் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும் மீறி கப்பலை இயக்கினால் சுட்டு வீழ்த்துவோம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.

சிலிண்டர் பதுக்கலை தவிர்க்கவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, ஒரு LPG சிலிண்டர் வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டர் பெறுவதற்கான கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு நிலவும் சூழலில் விநியோகத்தை சீர்செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் மருத்துவமனை போன்ற அவசர தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

வணிக சிலிண்டர்களை உபயோகிப்பவர்கள் மாற்று வழியைத் தேடிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உணவகங்களை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.