ஈரானிய கால்ப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சம்!

ஈரானிய கால்ப்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா விசா நீடிப்பை வழங்கியுள்ளதாக ‘அல்-ஜசீரா’ (Al-Jazeera) செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடரின் போது, தமது நாட்டின் தேசிய கீதத்தை இசைக்க மறுத்தமைக்காக நாடு திரும்பினால் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் நிலவியது.

இதனைக் கருத்திற்கொண்டு, ஈரான் தேசிய மகளிர் கால் பந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா அனுமதியை வழங்க அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, குறித்த ஐந்து வீராங்கனைகளும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், இது அவர்களது சொந்த இல்லம் போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தாம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவினால் பாதுகாப்பு வழங்கப்பட்ட வீராங்கனைகள்:
சாரா சர்பாலி அலிஷா (Zahra Sarbali Alishah)
மோனா ஹமூதி (Mona Hamoudi)
சாரா கன்பாரி (Zahra Ghanbari)
பாத்திமா பசந்திதே (Fatemeh Pasandideh)
அத்தேபே ரமசானிசாதே (Atefeh Ramezanizadeh)