பிரித்தானியாவில் குடியேற ‘A’ தர ஆங்கிலப் புலமை அவசியம்

ஐக்கிய இராச்சியத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்கள், இனி உயர் மட்ட ஆங்கில மொழிப் புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய சீர்திருத்தங்களை பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த மைல்கல் சீர்திருத்தங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுவரை நிரந்தர வதிவிட அனுமதிக்கு ஆங்கில அறிவு போதுமானதாக இருந்தது. இனி இது ‘A-level’ தரத்திற்கு இணையான உயர் மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகளுக்குத் தயாராக குடியேற்றவாசிகளுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட மாற்றங்கள் மார்ச் 5 அறிமுகப்படுத்தப்பட்டு, 2027 மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர சுமார் 200 மணிநேரப் பயிற்சி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் உள்துறை அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் தங்களின் மொழிப் திறனை நிரூபிக்க வேண்டும்.

பிரித்தானிய சமூகத்துடன் ஒன்றிணைந்து, பங்களிப்பு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி பெறுவதற்கான காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பவர்களுக்கு இதில் சலுகைகள் உண்டு. மருத்துவர்கள், தாதியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் 5 ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம்.

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோர் 3 ஆண்டுகளில் விரைவாகக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், “ஆங்கில மொழியில் சரளமாகப் பேசுவதே பிரித்தானிய வாழ்க்கை முறையில் ஒன்றிணைவதற்கும், வேலை தேடுவதற்கும், சமூகத்திற்குப் பங்களிப்பதற்கும் எளிதான வழியாகும். கடுமையாக உழைத்து, மொழியைக் கற்று, சமூகத்திற்குப் பங்களிப்பவர்களையே நாம் வரவேற்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொது ஆலோசனையின் போது சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. அவை பரிசீலிக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.