ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயது இளைஞன் கைது!

வீதியில் மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக செலுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அதனை செலுத்திய நபர் இவ்வாறு கைதாகியுள்ளார்.

இரு இளைஞர்கள் வீதியில் பயணிப்பவர்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும், விபத்து ஏற்படும் வகையிலும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சம்பவம் தொடர்பான காணொளியின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ பகுதியை நோக்கிச் செலுத்தப்பட்டமை இதன்போது கண்டறியப்பட்டது.

அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நவகத்தேகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால், இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர் செலுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.