கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே மேலதிக விமான சேவை!
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையால் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே மேலதிக விமான சேவையை முன்னெடுக்கவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணிக்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்படும் விமானம், பிற்பகல் 1.10 மணிக்கு லண்டனை அடையும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, UL1206 என்ற விமானம் அதே நாளில் பிற்பகல் 3.05 மணிக்கு லண்டனில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
இந்த மேலதிக விமான சேவை தொடர்பான தகவல்களைப் பெற விரும்பும் பயணிகள், இலங்கையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் Hotline எண் 1979 மூலமாகவும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற இலக்கம் மூலமாகவும் தொடர்பு கொண்டு, தகவல்களை பெற முடியும்.
அத்துடன் +94 74 444 1979 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு, குறுஞ்செய்திகளை அனுப்பியும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும், என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், தங்கள் பயண முகவர் மூலமாகவோ அல்லது விமான நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
