பிரித்தானியா ஆதரவளிக்க மறுத்ததால் கடுப்பான ட்ரம்ப்!

வொஷிங்டன், ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போருக்கு ஆதரவளிக்க மறுத்ததற்காக பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரை, ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான “சிறப்பு உறவு” தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஸ்டார்மர் குறித்துப் பேசிய ட்ரம்ப், “அவர் உதவிகரமாக இல்லை… இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இத்தகைய போக்கை நான் காண்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வியத்தகு முறையில் மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“உண்மையில் இது ஒரு மாறுபட்ட உலகம். உங்கள் நாட்டுடன் இதற்கு முன்பு நாம் கொண்டிருந்த உறவை விட இது மிகவும் வித்தியாசமானது” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

முன்பு “அனைத்திலும் மிகவும் வலுவானதாக” விவரிக்கப்பட்ட இந்த கூட்டணி, இத்தகைய அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று ட்ரம்ப் கூறினார்.

மேலும், மத்திய கிழக்கில் தனது போர்களை முன்னெடுப்பதற்கு வொஷிங்டன் இனி பிரிட்டனைச் சார்ந்திருக்கவில்லை என்பதையும் அமெரிக்க ஜனாதிபதி சூசகமாகக் குறிப்பிட்டார்.

“இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை, ஆனால் ஸ்டார்மர் உதவி செய்திருக்க வேண்டும், அவர் அதைச் செய்திருக்க வேண்டும்,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.