எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் பொலிஸ் பாதுகாப்பு!

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பொலிஸாரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, பீப்பாய்கள், அதிக கொள்ளளவான போத்தல்கள் ஆகியவற்றில் எரிபொருளை நிரப்பக்கூடாது என, நிரப்பு நிலையங்களுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளை மீறுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எரிபொருளைப் பதுக்குவோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் புலனாய்வுத் துறையினர் சோதனைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.