
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் பாரிய வான்வழித் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, தெற்கு ஈரானில் உள்ள ஒரு பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 108 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றே மூன்று ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த பாடசாலை ஈரானின் புரட்சிகர காவற்படை தளத்திலிருந்து 600 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட தாக்குதல்களால் ஈரானில், இதுவரை 201 பேர் பலியாகியுள்ளதாகவும், 747 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இந்தத் தாக்குதலை ஒரு “காட்டுமிராண்டித்தனமான செயல்” என்றும், “ஆக்கிரமிப்பாளர்களால் செய்யப்பட்ட மற்றுமொரு கறுப்புப் பக்கம்” என்றும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
