
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென உருவான எரிபொருள் வரிசைகள்!
சர்வதேச அளவில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பரவியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக திடீரென நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.
கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு, சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையங்களில் அதிகாலை முதலே மக்கள் வாகனங்களுடன் வரிசையில் காத்திருப்பது காணப்படுகிறது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சில நிலையங்களில் “எரிபொருள் இல்லை” என்ற அறிவிப்புகள் பதியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
நிலையங்களின் முன்பாக ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கை பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் அதிகளவில் பெற்றோல் பெற வரிசையில் காணப்படுகின்றன. அதேவேளை டீசல் பெற கனரக வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருக்கின்றன.
முன்னதாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட காலகட்டங்களிலும் காணப்படாத அளவிற்கு தற்போது நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
