-நுவரெலியா நிருபர்-
டிட்வா சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்கள், மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் தற்காலிக கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
நுவரெலியா, ரேந்தபொல – ஹக்கலை பகுதியைச் சேர்ந்த இக்குடும்பங்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவர்கள் வசிக்கும் தற்காலிக கூடாரங்கள் கடும் குளிர் மற்றும் வெயிலைத் தாங்கக்கூடிய நிலையில் இல்லை எனவும், முறையான பாதுகாப்பு அற்ற நிலையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் கூடாரங்களுக்குள் நீர் கசிவதாகவும், மின்சார வசதி இல்லாததால் இரவு வேளைகளில் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால், மக்கள் நீரைப் பெற்றுக்கொள்வதற்குப் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. குளிப்பதற்கும் உடைகளைத் துவைப்பதற்கும் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
அத்துடன், இப்பகுதியில் உள்ள 23 குடும்பங்களுக்கும் சேர்த்து 5 மலசலகூடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும், இது போதுமானதாக இல்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை மற்றும் போதிய சுகாதார வசதிகள் இன்மையால், தற்காலிக கூடாரங்களில் வசிப்பவர்களுக்குத் தோல் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் பல அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.
எங்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்குமென்று நாம் நினைக்கவில்லை” எனத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கான நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கோ அல்லது தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கோ அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.




