
மட்டு.செங்கலடியில் மக்களை அச்சுறுத்தும் நிலையில் காணப்படும் மின்கம்பம்!
ஏறாவூர் மின்சார சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் செங்கலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுவதால் அந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த மின்கம்பமானது வீதிச் சமிஞ்சை விளக்குகளுக்கு (Traffic Lights) அருகாமையில் அமைந்துள்ளது.
இது பிரதான வீதியை நோக்கி சாய்ந்த நிலையில் காணப்படுவதால், எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இரு பிரதான நகரங்களையும் இணைக்கும் போக்குவரத்து நெரிசல் மிக்க இப்பகுதியில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவது பாரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர் , பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினசரி கடந்து செல்லும் பாதையில் இந்த மின்கம்பம் உள்ளது.
இது விழுந்தால் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மின்கம்பம் சரிந்து வீழ்ந்தால் உயர்மின்னழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரத் தாக்கம் ஏற்படும் அபாயமும் இங்கு உள்ளது.
நீண்ட நாட்களாக இந்த மின்கம்பம் சரிந்த நிலையிலேயே காணப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை அவதானிக்கத் தவறிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
