
வெருகலில் PSTA சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு தெரிவித்து பிரேரணை நிறைவேற்றம்
-மூதூர் நிருபர்-
விரைவில் கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான PSTA சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு தெரிவித்து திருகோணமலை – வெருகல் பிரதேச சபையில் இன்று செவ்வாய்கிழமை பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கருணாநிதி தலைமையில் சபை அமர்வு இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது சபை உறுப்பினர் குணநாயகம் சுசிலாவினால் PSTA ரத்து செய்வது தொடர்பான தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இதன்போது சபை தவிசாளரால் பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
சபையின் மொத்த 13 உறுப்பினர்களில் அனைவரும் சபை அமர்வில் கலந்து கொண்டதுடன், இதில் 12 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் மாத்திரம் ஆதரவும், எதிர்ப்பும் இல்லாமல் நடு நிலமை வகித்தார்.
இதன் பின்னர் வெருகல் வப்பியா சந்தியில் PSTA சட்ட மூலத்தை ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பெறப்பட்டது.
இதில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கையெழுத்துகளை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
