தான் கலந்துகொள்ளவிருந்த உரை இரத்து செய்யப்பட்டமை குறித்து நாமல் விடுத்துள்ள அறிக்கை!

பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தான் கலந்துகொள்ளவிருந்த உரை இரத்து செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்  ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“ஒக்ஸ்போர்ட் சங்கம் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கம் (Cambridge Union) ஆகியவற்றின் மரபுகள், பல தலைமுறைகளாக சுதந்திரமான விசாரணை, விவாதம் மற்றும் துணிச்சலான கருத்து வெளிப்பாடு ஆகிய உயரிய கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளன.

இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களுக்கு அழைக்கப்படும் பேச்சாளர்கள், அறிவுப்பூர்வமான மற்றும் விமர்சன ரீதியான பார்வையாளர்களைக் கொண்ட சபையின் கடினமான கேள்விகளுக்கு முகங்கொடுக்கவும், தமது கருத்துக்களைப் பாதுகாக்கவும் அதேவேளை மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்த விழுமியங்களை மதித்தே, எனக்குக் கிடைத்த அழைப்பினை நான் நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டு இதில் பங்கேற்க எதிர்பார்த்திருந்தேன்.

எனினும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக, இந்த உரைகள் மற்றும் கலந்துரையாடல் அமர்வுகளை இரத்து செய்ய வேண்டிய நிலைக்கு ஏற்பாட்டுக் குழுவினர் தள்ளப்பட்டுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும். ஒருவரை அச்சுறுத்தி மௌனிக்கச் செய்வதை விட, தர்க்கரீதியான வாதங்கள் ஊடாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதே சமூகத்திற்கு முக்கியமானதாகும்.

அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றம் என்பது, திறந்த மனதுடனான கலந்துரையாடல்களின் போது வெவ்வேறு கண்ணோட்டங்கள் சந்திக்கும் போதே சாத்தியமாகும். எனவே, எனது கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் உட்பட அனைத்து விமர்சகர்களுடனும் நேரடியாக உரையாடுவதற்கான வாய்ப்பினை நான் எப்போதும் வரவேற்கின்றேன்.

இவ்வாறான வாய்ப்புகளை நிராகரிப்பது ஜனநாயகத்தை ஒருபோதும் பலப்படுத்தாது. விவாதங்களின்றி பிளவுகளை மாத்திரம் பேணுவது பலவீனத்தையே வெளிப்படுத்தும்.

எனக்கு அழைப்பு விடுத்தமைக்காக இரு மாணவர் சங்கங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை நான் புரிந்துகொள்கின்றேன். எதிர்காலத்தில் ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கின்றேன்” என நாமல் ராஜபக்ஷ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.