சாரதியை கொலை செய்து விட்டு முச்சக்கரவண்டியை திருடிய 16 வயது சிறுவன் கைது
புத்தளம் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைப் படுகொலை செய்துவிட்டு, அவரது வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், தில்அடிய – ரத்மல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை புத்தளம், அடப்பனாவில்லுவ பிரதேசத்திலுள்ள வாய்க்கால் ஒன்றினுள் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, கடந்த 21ஆம் திகதி தனது முச்சக்கரவண்டியில் வாடகைப் பயணம் (Hire) சென்ற , அப்துல் லத்தீப் (வயது 75) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
சம்பவம் இடம்பெற்ற தினமன்று இரவு 9.30 மணியளவில், குறித்த 16 வயது சந்தேகநபர் உயிரிழந்தவரின் வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும், அவருடன் இணைந்தே உயிரிழந்தவர் வாடகைப் பயணத்திற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியைக் கொள்ளையிடும் நோக்கில், சந்தேக நபரால் சாரதியின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சடலத்தை வீசிவிட்டு முச்சக்கரவண்டியை சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புத்தளம் முல்லை வீடமைப்புத் தொகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டியை சந்தேகநபர் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில், பொலிஸார் அதனை மீட்டிருந்தனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர் நேற்று அவரது வீட்டில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்குத் தீவிரமாக அடிமையானவர் எனவும், பணம் மற்றும் முச்சக்கரவண்டியைக் கொள்ளையிடும் நோக்கிலேயே இந்தப் படுகொலையைச் செய்துள்ளதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
