கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும், பரிசோதனையும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் நெறிப்படுத்தலில், அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்தியமும் சிறப்பாக அமைந்ததுடன், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து பொலிஸ் பிரிவு வாகனங்களின் பேரணி கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக ஆரம்பமாகி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது.

மேலும் காலை முதல் மாலை வரை பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள், சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள், அலுவலகங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள் பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிப்படுத்தல் வகுப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்முனை, சவளைக்கடை, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, சம்மாந்துறை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.