
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை
-அம்பாறை நிருபர்-
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
இது அவர்களுக்கான இறுதி அறிவித்தலாகும் என அலியுறுத்தியுள்ளது.
அத்துடன் கட்டாக்காலியாக பிடிக்கப்படும் மாடுகளுக்கு பிரதேச சபையினால் ஒரு மாட்டுக்கு 10,000 ரூபா தண்டப்பணமும் ஒருநாள் பராமரிப்புச் செலவாக 2,000 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மூன்று நாட்களுக்குள் தண்டப்பணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் தவறும் பட்சத்தில் இம்மாடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரச உடமையாக்கி ஏலத்தில் விற்கப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.
மேலும் இந்நாட்களுக்குள் நோய்வாய்படும் மற்றும் இறக்கும் மாடுகளுக்கு சம்மாந்துறை பிரதேச சபை பொறுப்பேற்காது என்பதுடன் இம்மாடுகளின் சொந்தக்காரர்கள் இருப்பின் அவர்கள் தங்களின் மாடுதான் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக தங்களின் பகுதி கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மாட்டுத் துண்டு (பண்ணை காட்) மற்றும் ஆள் அடையாள அட்டை என்பவற்றை ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இது தவிர தவறும் பட்சத்தில் பிரதேச சபையினால் பிடிக்கப்படும் மாடுகள் (கால் நடைகள்) பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.
