சீட் பெல்ட் அணியாது பயணித்த சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம்

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியாது பயணித்த, சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அந்த அறிவுறுத்தலை பின்பற்றாது அலட்சியமாக நடந்து கொண்டவர்களுக்கு, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில், உள்நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் சாரதிகள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், விபத்துக்களின் போது காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும், இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.