பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் முதல் இலங்கைக் கடற்படைக் கப்பல்!
அமெரிக்காவினால் இலங்கைக் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நான்காவது கடலோரக் காவல்படை கப்பல் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளது.
இது இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட கடல் பயணமாக அமையவுள்ளது.
முன்பு அமெரிக்க கடலோரக் காவல்படையின் “Decisive” என அழைக்கப்பட்ட இந்தக் கப்பல், தற்போது P628 என பெயரிடப்பட்டுள்ளது.
பால்டிமோர் (Baltimore) துறைமுகத்திலிருந்து நேற்று புறப்பட்ட இக்கப்பல், சுமார் 14,775 கடல் மைல் தூரத்தை கடக்கவுள்ளது.
77 நாட்கள் பயணத்தின் பின்னர், எதிர்வரும் 2026 மே 8 அன்று திருகோணமலையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கப்பல் பனாமா கால்வாய் (Panama Canal) வழியாக பயணிக்கும் முதல் இலங்கைக் கடற்படைக் கப்பலாக வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தவுள்ளது.
கேப்டன் கயான் விக்ரமசூரிய தலைமையில் 14 அதிகாரிகள் மற்றும் 72 மாலுமிகள் என மொத்தம் 86 பேர் இக்கப்பலில் பயணிக்கின்றனர்.
இக்கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) கடல் கண்காணிப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடல் வழிப்பாதைகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்காவின் மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் (Excess Defense Articles) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நான்காவது கப்பல் இதுவாகும்.
இதன் மூலம் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு பிரதிபலிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
