உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில்!

இலங்கையில் அடையாள விபரங்கள் உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும், தேவையான விபரங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அவை முடக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அமைப்பில் 897,802 சிம் அட்டைகள் முறையான அடையாள உறுதிப்படுத்தல் இன்றி இயங்கி வருகின்றன.

சுமார் 245,811 வணிக சிம் அட்டைகளும் பயன்பாட்டில் உள்ளன.

பாரிய கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட கடுமையான குற்றச் செயல்களில் இவ்வாறான பதிவு செய்யப்படாத சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளின் போது சரியான சந்தாதாரர் விபரங்கள் (Subscriber Data) பொலிஸாருக்கு அவசியமாகும். விபரங்கள் இல்லாமை குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைகிறது.

2019 ஆம் ஆண்டு சிம் பதிவு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பதிவுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

தங்கள் சிம் அட்டைகளை முறையாகப் பதிவு செய்யாத பயனாளர்கள், தேவையான அடையாள விபரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அந்தச் சிம் அட்டைகள் முடக்கப்படும் (Deactivation) என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.