மனைவியுடன் 8 இலட்சம் ரூபா செலவில் காதலர் தினம் கொண்டாடிய நபர் கைது!
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி, தனது மனைவியுடன், 8 இலட்சம் ரூபா செலவு செய்து, மிக ஆடம்பரமாக காதலர் தினத்தை கொண்டாடிய நபரொருவர் தொடர்பில், பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சியான உண்மைகள் தெரிய வந்துள்ளது.
எந்தவொரு வேலையும் செய்யாமல், வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் கொள்ளையிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சந்தேக நபர் ஒருவர் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல்வேறு அடகு மையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த 8 இலட்சம் ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி தனது மனைவியுடன் மிக ஆடம்பரமாகக் காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிட்டம்புவ பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், ‘ஐஸ்’ போதைப்பொருளுக்குத் தீவிரமாக அடிமையானவர்.
தனது தினசரி போதைப்பொருள் தேவைக்கான 50,000 ரூபாவைத் திரட்டுவதற்காகவே நிட்டம்புவ மற்றும் அத்தனகல்ல பகுதிகளில் தொடர்ச்சியாகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிள் மற்றும் 11 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் ஏற்கனவே 08 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி என தெரிவிக்கப்படுகின்றது
