பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை

தன்னை பிரிந்து சென்ற மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்த, 37 வயதுடைய கணவரான இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

நிரோதா என அழைக்கப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா (வயது 32), 2025 ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடந்த அன்று காலை, நிரோதா அங்கு இருப்பார் என்பதை அறிந்து வேரகலகே, 15 செ.மீ நீளமுள்ள சமையலறைக் கத்தியுடன் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு நிரோதாவின் முகம், கழுத்து, மார்பு, கை மற்றும் கால்களில் மிகக் கொடூரமான முறையில் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல் எவ்வளவு தீவிரமாக இருந்ததென்றால், பயன்படுத்தப்பட்ட கத்தியின் கைப்பிடி உடைந்து போனது. இரண்டு கார்களுக்கு இடையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிரோதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலைக்குப் பிறகு தனது காரில் வேகமாகத் தப்பிச் சென்ற வேரகலகே, சிறிது நேரத்தில் லொறி ஒன்றின் முன்னால் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.

எனினும், அவர் உயிருடன் மீட்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இரத்தக் கறையுடன் கூடிய கையுறைகளும், கத்திகள் அடங்கிய பொதியும் கண்டெடுக்கப்பட்டன.

விசாரணையில், இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் 2022 இல் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தமை தெரியவந்தது.

அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2025 ஏப்ரல் முதல் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் நிரோதா தனது சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கியதைக் கண்டு பொறாமையடைந்த வேரகலகே, இந்தத் திட்டமிட்ட கொலையைச் செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வழக்கில் தற்போது பிரித்தானிய நீதிமன்றம், திசர வேரகலகேவுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.