மாணவிகளுக்கு இளைஞர்களால் அச்சுறுத்தல் : தட்டிக்கேட்ட ஆசிரியரை தள்ளிவிட்டு தப்பியோட்டம்!

கந்தளாய், பேராறு பகுதியில் பகுதிநேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு, மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

பாடசாலை ஒன்றிற்கு முன்னால், நேற்று வெள்ளிக்கிழமை அநாவசியமாக மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த இளைஞர்களை ஆசிரியர் ஒருவர் நிறுத்த முற்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த இளைஞர்கள் ஆசிரியரைக் மதிக்காமல் அவரைத் தள்ளிவிட்டு விட்டு அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஆசிரியருக்கே இந்த நிலை என்றால், மாணவிகளின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வீதி விதிகளைப் புறந்தள்ளி, ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் அமர்ந்து கொண்டு அதிவேகமாகப் பயணிக்கின்றனர்.

வகுப்பு முடிந்து வீடு திரும்பும் மாணவிகளைப் பின்தொடர்வதும், அவர்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் செயற்படுவதும் அப்பகுதியில் தொடர்கதையாகியுள்ளது.

இந்த அச்சம் காரணமாக மாணவிகள் தனியாக வகுப்புக்குச் செல்லப் பயப்படுவதாகவும், இது அவர்களின் கல்விச் செயல்பாடுகளைப் பெரிதும் பாதிப்பதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக இப்பகுதிக்கு பொறுப்பான பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருப்பதை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“எங்கள் பிள்ளைகளைத் தனியாக வகுப்புக்கு அனுப்பவே அச்சமாக இருக்கிறது. பொலிஸார் வீதி ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, இவ்வாறான இளைஞர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர் .

சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் துறையினரும், அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, வீதிகளில் அநாவசியமாகத் திரியும் இளைஞர்களைக் கட்டுப்படுத்தி, மாணவிகளின் பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.