
பேருந்து மோதி வீதியோரம் நின்ற தாய் உயிரிழப்பு, 3 பிள்ளைகள் படுகாயம்
-மஸ்கெலியா நிருபர் –
அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் யட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அவரது மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு, அவர்களது பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளது.
பின்னர் மின் கம்பத்தையும் உடைத்துக்கொண்டு வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
விபத்து நடந்த சந்தர்ப்பத்தில், உயிரிழந்த பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் மாலை நேர வகுப்புக்குச் செல்வதற்காக பஸ்ஸுக்காக வீதியோரத்தில் காத்திருந்துள்ளார்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் அவர்கள் நால்வர் மீதும் மோதி கவிழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் மேலா சதுராணி குலதுங்க (46 வயது), இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனத் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளும் தற்போது கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக பஸ்ஸின் சாரதி யட்டியாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
