
கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விடுவிக்கப்பட்டார்
சந்தேகத்தின் பேரில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், பெர்க்சையர் மற்றும் நோர்போக்கில் உள்ள சில முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது.
அண்ட்ரூவின் கைது குறித்துப் பதிலளித்த மூன்றாம் சார்ள்ஸ் மன்னர், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பொலிஸாருக்கு தனது முழுமையான மற்றும் இதயப்பூர்வமான ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் தெரிவித்தார்.
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான தொடர்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ட்ரூவிடம் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பொலிஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் தொகுப்பில் இவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
எவ்வாறாயினும், அந்த நபர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தேம்ஸ் வேலி பொலிஸார் உறுதிப்படுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்ட்ரூ கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதியாகவும் கடுமையாகவும் மறுத்து வருகிறார்.
