தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

 

-மன்னார் நிருபர்-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 05 ஆம் திகதி (05-03-2026) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இரு படகில் மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர்.

இதன் போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 10 தமிழக மீனவர்களை கைது செய்ததோடு,அவர்கள் பயணித்த 02 படகையும் கைப்பற்றி தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,இன்று(19) வியாழன் மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.