
விளையாட்டுத்துறை ஊடாக சுற்றுலாவை மேம்படுத்த வாய்ப்பு!
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட மிக அதிகளவான எண்ணிக்கையாகும்.
15 நாடுகளை இலக்காகக் கொண்டு உலகளாவிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடர் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. விளையாட்டுத்துறை ஊடாக சுற்றுலாவை மேம்படுத்த இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
கொழும்பு நகரில் உள்ள விருந்தகங்களில் அறைகள் நிரம்பியுள்ள விகிதம் தற்போது 100 வீதமாகக் காணப்படுவதாகவும், அறைகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
