பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர் அண்ட்ரூ கைது!
பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரரான அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை தனது 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் அண்ட்ரூ, பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்ட்ரூவின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான பெர்க்சயர் மற்றும் நோர்போக் ஆகிய இடங்களிலுள்ள இல்லங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை நோர்போக்கில் உள்ள சான்ட்ரிங்ஹாம் மாளிகைக்கு பொலிஸ் வாகனங்கள் வருகை தந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்பஸ்டீனுடன் இரகசிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் தேம்ஸ் வேலி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் ஆரம்பத்திலிருந்தே திட்டவட்டமாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
