ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது : மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
மத்தள அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் வைத்து ஜனாதிபதியை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய கட்டான பகுதியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு பணியில் இருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கதிர்காமத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் ஆசனப் பட்டிகள் இல்லாத காரணத்தால், அந்த பேருந்தை அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய பொலிஸார் அனுமதிக்கவில்லை.
இதனால் பொலிஸாருக்கும் பேருந்தில் வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பேருந்தில் வந்தவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் கைபேசியில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை பகிரங்கமாக அவதூறாகப் பேசியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவே குறித்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் தலைமையகத்திற்கும், மற்றைய இரு அதிகாரிகள் கொட்டாவ மற்றும் கடவத்த பொலிஸ் நிலையங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
