உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை தாயும் தாயின் காதலனும் இணைந்து கொலை!

ஹோமாகம-மாகம்மன பகுதியில் தாயின் காதலனால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த குழந்தையின், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

குழந்தை கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதும், தலையில் ஏற்பட்ட பலத்த காயமுமே உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பணீத செனவிரத்னவினால் கடந்த 15 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகம்மன, சமகி மாவத்தையைச் சேர்ந்த 2 வயது 4 மாதங்கள் மதிக்கத்தக்க குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குழந்தை தனது தாய் மற்றும் மூத்த சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். தந்தை இவர்களை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தாய் வேறொரு நபருடன் தகாத உறவை வைத்திருந்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக தாயின் காதலன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இதன்போது, பிள்ளைகளால் தமக்கு இடையூறு ஏற்படுவதாகக் கருதிய தாயும் குறித்த நபரும், சிறுமிக்கு அடிக்கடி திட்டியும், உடல் ரீதியான தாக்குதல்களை நடத்தியும் வந்துள்ளனர்.

சிறுமி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் அதிகாலையிலும் அந்த நபர் சிறுமியைத் தாக்கியுள்ளார்.

பின்னர் மறுநாள் காலை சிறுமியை வெளியே அழைத்துச் சென்றவர், மாலையில் மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமிக்கு ஏதோ ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஹோமாகம பதில் நீதவான் பத்மசிறி ஜயவர்தன வைத்தியசாலைக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், விசேட சட்ட வைத்திய அதிகாரி மூலம் பிரேத பரிசோதனையை நடத்துமாறு மத்தேகொட பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சிறுமியின் தலை ஒரு மழுங்கிய மேற்பரப்பில் மோதியதால் மூளைக்கு ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் அவர் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான சித்திரவதைகளே இந்த உயிரிழப்புக்கு நேரடி காரணம் என மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.