
அக்கரைப்பற்றில் நோன்பு காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறை!
அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு கூட்டத்தில், நோன்பு காலத்தை முன்னிட்டு சமூக ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமா சபை பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவகர்கள், வலய கல்வி பணிமனை அதிகாரிகள், பிரதேச சபை தவிசாளர், மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது அக்கரைப்பற்றில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரும், கல்வி நடவடிக்கைகளுக்குச் செல்லும் மாணவிகளைத் தொந்தரவு செய்பவர்களும் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இத்தகைய நபர்களையும் அவர்களது மோட்டார் வாகனங்களையும் புகைப்படம் அல்லது வீடியோவாக பதிவு செய்து, 0769013166 என்ற இலக்கத்திற்கு “வாட்ஸ்அப்” மூலம் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் துறையினர் நடவடிக்கை எடுப்பர் என தெரிவிக்கப்பட்டது.
நோன்பு காலத்தை முன்னிட்டு, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு மையங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் மதியம் 12.00 மணியுடன் நிறைவுபெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளுக்கு மட்டும் பிற்பகல் 4.00 மணி வரை விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் தொழுகை மற்றும் மார்க்கச் செயல்பாடுகள் இரவு 11.00 மணிக்கு முன் நிறைவுபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்கள் முறையான துணையுடன் சென்று வர வேண்டும் என்றும், ஒலிபெருக்கி பயன்பாட்டில் சத்தத்தைக் குறைத்துப் பயன்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்துவோர் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் மேற்கண்ட வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நோன்பு காலத்தில், பஸ் தரிப்பு நிலையத்திற்கு அண்மித்த தேநீர் சாலைகள் தவிர்ந்த மற்ற தேநீர் சாலைகள் பிற்பகல் 3.00 மணி வரை மூடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஓடர்களுக்கான விநியோக சேவைக்கு தடை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அக்கரைப்பற்றில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களும் பிற்பகல் 11.00 மணியுடன் மூடப்பட்டு, ஊழியர்களுக்கு மீதிய நாள் விடுமுறையாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தீர்மானங்களை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மீறுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மாநகர முதல்வர் ஏ. எல். எம். அதாஉல்லா பொதுமக்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
