
தபால் ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இரவு நேர தபால் கடுகதி புகையிரதம், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கந்தளாய் – கித்துலூத்து சிங்ககம காட்டுப் பகுதியில் யானை ஒன்றுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் இலிருந்து புறப்பட்ட இந்த புகையிரதம், இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் கந்தளாய் – கித்துலூத்து சிங்ககம காட்டுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானையுடன் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் யானை புகையிரத இயந்திரத்தின் முன்பகுதியில் மோதி, நான்கு சக்கரங்களுக்கு இடையில் மிக மோசமாகச் சிக்கியுள்ளது. இதன் விளைவாக புகையிரதத்தின் முன் இயந்திரம் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது.
விபத்துக்குள்ளான இயந்திரத்தை மீட்கும் பணியில் ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யானையின் உடல் சக்கரங்களுக்கு இடையில் சிக்கியுள்ளதால், உடலை அகற்றிய பின்னரே இயந்திரத்தை அப்புறப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சட்டரீதியான நடைமுறைகளின் காரணமாக வனசீவராசிகள் திணைக்களம் அதிகாரிகளின் நேரடி அனுமதி மற்றும் அறிவுறுத்தலின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
திடீர் விபத்தால் பதற்றமடைந்த பயணிகள், யானை நடமாட்டம் அதிகம் உள்ள அந்த அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக பல மைல் தூரம் கால்நடையாகப் பயணித்து பிரதான வீதியை வந்தடைந்தனர்.
தற்போது அந்தப் பாதையூடான புகையிரதப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், சீரமைப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக திருகோணமலை இலிருந்து கூடுதல் புகையிரத ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
