
சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக மீண்டும் விசாரணை
இந்தியா-கேரளாவில், சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் அனைத்து வயது பெண்களும் வழிபட வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை, இந்திய உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இந்திய உயர் நீதிமன்றத்தின் ஒன்பது நீதியரசர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் விசாரிக்க உள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் ஆலயம் உள்ளது.
இங்கு, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தநிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 2018 செப்டம்பரில், 4:1 என்ற விகிதத்தில் பெரும்பான்மை தீர்ப்பு அளித்தது.
இதன்படி, சபரிமலை ஆலயத்தில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கேரளா முழுதும் போராட்டங்கள் வெடித்தன.
அத்துடன் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 60-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை நேரடியாக முடிக்காமல், இதில் அடங்கியுள்ள ஆழமான சட்டக் கேள்விகளை தீர்க்க, ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நீதியரசர்களை அடங்கிய அமர்வுக்கு 2019இல் மாற்றியது.
