இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மைதானத்திற்குள் இவற்றுக்குத் தடை

இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பார்வையிட செல்லும் ரசிகர்கள் சில பொருட்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

போட்டி இடம்பெறும் போது பாதுகாப்பு கடமைகளுக்காக 2,000 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், 600 போக்குவரத்து காவல்துறையினர்; பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுவதுடன், உடல் மற்றும் வாகனப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க மைதானத்தின் அனைத்து வாயில்களும் போட்டி ஆரம்பமாவதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே பிற்பகல் 2 மணிக்கு திறக்கப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் போத்தல்கள், பெரிய பயணப் பைகள், தலைக்கவசங்கள், ஜாக்கெட்டுகள், மதுபானம், இசைக்கருவிகள் மற்றும் ட்ரோன் கருவிகள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதால், நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் மைதானத்தைச் சுற்றிக் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் சபையின் விசேட அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்கள் கெத்தாராம வீதிச் சந்தி மற்றும் வில்சன் பெரேரா வீதி ஊடாக நுழைய அனுமதி இல்லை.

மைதான வளாகம், சதொச வாகனத் தரிப்பிடம், செபஸ்தியன் கால்வாய் வீதி (1 ஆவது மற்றும் 2 ஆவது பாலங்களுக்கு இடையில்), கோவில் வீதி மற்றும் அப்பிள்வத்தை தரிப்பிடங்கள், 100 அடி வீதியின் இருபுறமும் வாகனங்களை தரித்து நிறுத்த முடியும்.

வின்சென்ட் பெரேரா மாவத்தை, கிராண்ட்பாஸ் வீதி, பாபா புள்ளே பாலம் பகுதி, மல்வத்தை பாலம் மற்றும் மாளிகாவத்தை ஒழுங்கை உள்ளிட்ட மைதானத்திற்கு அருகாமையிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் அல்லது தடைசெய்யப்படும்.

அனைத்து ரசிகர்களும் மிகவும் பொறுமையுடனும், ஒருவருக்கொருவர் மதிப்பளித்தும் இந்தப் போட்டியைக் கண்டு களிக்க வேண்டும். அநாகரிகமாகவோ அல்லது மதுபோதையில் கலகம் விளைவிப்போர் மீதோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்புத் தரப்பு எச்சரித்துள்ளது.