சீனாவில் திடீரென தாழிறங்கிய வீதி

சீனாவின் ஷாங்காய் நகரில் வீதியின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியுள்ளது.

எந்நேரமும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் ஷாங்காய் வீதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றது.

இந் நிலையில், பணியாளர்கள் ஒரு புறம் வேலை செய்துகொண்டிருந்தபோதே திடீரென அவ்வீதியின் ஒரு பகுதியில் மெல்ல மெல்ல விரிசல் ஏற்பட்டு பின்னர், பாரியதொரு பள்ளம் தோன்றி, வீதி உள்வாங்கப்பட்டது.

கட்டுமானப் பணிகளுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், உபகரணங்கள் அனைத்தும் அந்த பாரிய பள்ளத்துக்குள் விழுந்த பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால் எவருக்கும் உயிராபத்து நேரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஷாங்காய் நகரில் மென்மையான வண்டல் மண், நிலத்தடி நீரை தொடர்ந்து உரிஞ்சிக்கொள்வதாலும் தற்போது அங்கு அதிகரித்து வரும் கட்டுமானப் பணிகளாலும் அப்பகுதியில் வீதி உள்வாங்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.