அண்மையில் நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மூதூர் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
இதனால் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார மற்றும் வாழ்வாதார இழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சூறாவளியால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்த போதிலும், அந்த கொடுப்பனவு மூதூர் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை மூதூர் பிரதேச செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே 25,000 ரூபா கொடுப்பனவு பெற்ற அனைவரும் 50,000 ரூபா வழங்கப்பட தகுதியானவர்கள் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
சிலருக்கு மட்டுமே 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், பல தகுதியானவர்கள் இதுவரை அந்த நிவாரணத் தொகையை பெறவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்டத்தையடுத்து, போராட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் சிலருக்கு மூதூர் பிரதேச செயலகம் அலுவலகத்தில் பிரதேச செயலாளரை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மூதூர் பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சம்பவம் தொடர்பாக மீள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தகுதி உடையவர்களுக்கு நிலுவையில் உள்ள 50,000 ரூபா நிவாரணத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்தார்.








