ரீலுக்காக “பிசாசு நண்டு” சாப்பிட்டவர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸில் ஒரு உணவு வலைப்பதிவர் சமூக ஊடகங்களில் ரீல் மோகத்தால் அதிகமானவர்களை கவர வேண்டும் என்பதற்காக விஷம் கலந்த “பிசாசு நண்டு” சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
எம்மா அமித் (வயது-51) என்பவர் உள்ளூர்வாசிகள் “டெவில் கிராப்” என்று அழைக்கும் நச்சுத்தன்மையுள்ள ஜோசிமஸ் ஏனியஸ் நண்டை சாப்பிடுவதை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இறந்துள்ளார்.
குறித்த பதிவில் பலவானில் உள்ள புவேர்ட்டோ பிரின்செசாவில் உள்ள தனது கடலோர வீட்டிற்கு அருகில் நத்தைகள் மற்றும் மட்டிகளுடன் நண்டுகளை பிடித்து அதை சமைத்து அமித் உண்பதை காணக் கூடியதாக இருந்துள்ளது.
இதையடுத்து அவர் பானையிலிருந்து டெவில் கிராப் என்று அழைக்கப்படும் நண்டுகளில் ஒன்றை சமைத்து சாப்பிடுவதை படம்பிடித்து காட்டினார் .
நண்டை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இவர் சுயநினைவை இழந்ததாகவும் இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருடன் குறித்த நண்டுகளை சாப்பிட்ட அவரது தோழியும் உயிரிழந்துள்ளார். ரீல் மோகத்தால் இரு உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
