ஜெப்ரி எப்ஸ்டீன் – டொனால்ட் ட்ரம்ப் தொடர்பு குறித்த மர்மங்களுக்கு புதிய சான்றுகள்!

அமெரிக்க நீதித் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein Files), பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரது தொடர்பு குறித்து நீண்டகாலமாக நிலவி வந்த மர்மங்களுக்குப் புதிய சான்றுகளை வழங்கியுள்ளதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, புளோரிடா மாகாணத்தின் பாம் பீச் (Palm Beach) முன்னாள் பொலிஸ் மா அதிபரான மைக்கல் ரெய்டர், 2019 ஆம் ஆண்டு FBI விசாரணை அதிகாரிகளிடம் வழங்கிய தகவல்கள் இந்த ஆவணங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

2006 ஆம் ஆண்டு எப்ஸ்டீனுக்கு எதிராகத் தனது பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்த போது, டொனால்ட் ட்ரம்ப் தமக்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தியதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தொலைபேசி உரையாடலின் போது, எப்ஸ்டீனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்ததற்காகத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த ட்ரம்ப், எப்ஸ்டீன் இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபட்டு வருவது “அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்” என்று கூறியதாக ரெய்டர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எப்ஸ்டீன் ஒரு அருவருப்பான மனிதர் என்றும், நியூயோர்க்கில் உள்ள பலருக்கும் அவரது குணாதிசயங்கள் குறித்துத் தெரியும் என்றும் ட்ரம்ப் அந்த அழைப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எப்ஸ்டீனின் சகாவான கெய்ஸ்லேன் மெக்ஸ்வெல் (Ghislaine Maxwell) ஒரு “தீயவர்” என்றும், பொலிஸ் அவர் மீது விசேட கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியதாக அந்த FBI ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டபோது, இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த டொனால்ட் ட்ரம்ப், எப்ஸ்டீன் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகிறார் என்பது தமக்குத் தெரியாது என்றும், பல ஆண்டுகளாக அவருடன் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை என்றும் மறுத்திருந்தார்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள 2006 ஆம் ஆண்டு தொலைபேசி அழைப்பு குறித்த தகவல்கள், ட்ரம்ப் முன்னரே பல உண்மைகளை அறிந்திருந்தாரா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளன.

இது குறித்து வெள்ளை மாளிகையிடம் பிபிசி கேட்கப்பட்டபோது, இவ்வாறானதொரு அழைப்பு 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்றிருக்கலாம் அல்லது இடம்பெறாமலும் இருக்கலாம் என்று மழுப்பலான பதிலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் ஒரு தவறான நபர் என்பதால் அவரைத் தனது மார்-ஏ-லாகோ விடுதியிலிருந்து ட்ரம்ப் முன்னரே வெளியேற்றியிருந்தார் என்பதே உண்மையென வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் மீண்டும் வலியுறுத்தியுள்ளார், என சர்வதேச செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.