ஹட்டனில் திடீர் வாகன சோதனை : 10 வாகனங்களுக்கு காலக்கெடு!

-நுவரெலியா நிருபர்-

ஹட்டன் பிரதேசத்தில் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை மாலை, மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகனச் சோதனையின்போது 10 வாகனங்களுக்கு உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவற்றின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில் கீழ், ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்தச் சோதனையில், ஹட்டன் மல்லியப்பு சந்தி வழியாக பிரதான வீதியூடாகப் பயணிக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூரப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் உட்பட 15 வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், 2 தனியார் பேருந்துகள், 01 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, 02 முச்சக்கர வண்டிகள், 02 லொறிகள் மற்றும் 02 எரிபொருள் போக்குவரத்து பவுசர்கள் உட்பட 10 வாகனங்களின் வருவாய் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை மோட்டார் வாகன ஆய்வாளரால் தடுத்து வைத்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வழங்கப்பட்டுள்ள 14 நாட்களுக்குள் வாகனங்களை சீர்செய்து, நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பரிசோதகர் காரியாலயத்தில் உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதன் பின்னரே தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகன வருவாய் பத்திரம் மற்றும் வாகன ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் வாகன உரிமையாளர்களுக்கு நுவாரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரதான பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.

இதன் போது, பல்வேறு ஒலி நாடாக்கள், விட்டு விட்டு ஔிரக்கூடிய மின் குமிழ்கள் மற்றும் சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை பொருத்திய வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் கருவிகள் தொடர்பிலும் பொது போக்குவரத்து வாகனங்களில் வீதி விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு இதன் போது கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.