‘குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம்’ குறித்து மறுபரிசீலனை செய்ய தீர்மானம்!
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம்’ குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் வெளியானது.
இந்தச் சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் ஒரு மாத கால அவகாசத்தை நீதி அமைச்சர் வழங்கியுள்ளார்.
அரசாங்கம் இதனை மறுபரிசீலனை செய்ய முன்வந்துள்ளதால், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களின் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
வீட்டு உரிமையாளர்களால் வாடகைக்கு குடியிருப்பவர்களின் நீர், மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதையோ அல்லது பலவந்தமாக வெளியேற்றுவதையோ தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
இருப்பினும், இது நில உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதிப்பதாகப் பல்வேறு தரப்பினர் கவலை வெளியிட்டிருந்தனர்.
