தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வீரர்களுக்கு வரவேற்பு
-மன்னார் நிருபர்-
தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில், 20 வயது ஆண்கள் பிரிவில் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, 2 ஆம் இடத்தை பெற்ற நிலையில், குறித்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உதைப்பந்தாட்ட இறுதி போட்டியில், 20 வயது ஆண்கள் பிரிவில் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹுசேனியா அணிகள் மோதிய போட்டியில் ஹமீட் அல் ஹுசேனியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .
இப்போட்டியில் மன்/ புனித.சவேரியார் ஆண்கள் கல்லூரி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று, வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.
இவ் விளையாட்டு வீரர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு, இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது, பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு தலைமையில் வீரர்கள் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வீரர்கள் ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர்,வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பழைய மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






