எப்ஸ்டீன் ஆவணங்களில் 169 முறை தலாய் லாமாவின் பெயர்!

சர்ச்சைக்குரிய அமெரிக்க நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்திகளை,அவரது அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலேயே உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் தற்போது அமெரிக்காவில் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த ஆவணங்களில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் 169 முறை குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்த விவகாரம் குறித்து தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமீபகாலமாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தலாய் லாமாவை ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

தலாய் லாமா ஒருபோதும் எப்ஸ்டீனைச் சந்தித்ததில்லை. அவருடன் எந்தவிதத் தொடர்போ அல்லது பேச்சுவார்த்தையோ வைத்துக்கொண்டது இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, தலாய் லாமாவின் பெயர் 169 இடங்களில் வந்தாலும், அவை அனைத்தும் நேரடியான குற்றச்சாட்டுகள் அல்ல என்று கூறப்படுகிறது.

கொடையாளர்கள் பட்டியல் (Donor lists), முகவரி புத்தகங்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆவணங்களில் மட்டுமே அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இது ஒரு பொதுவான குறிப்புதானே தவிர, எப்ஸ்டீனின் சட்டவிரோதச் செயல்களில் அவருக்குப் பங்கு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் உலகப் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்று வருவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு நியூயோர்க் சிறையில் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

14th Dalai Lama - Press Statement
14th Dalai Lama – Press Statement