8 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் பேச்சு வார்த்தை

-மஸ்கெலியா நிருபர்-

தோட்ட முகாமையாளரால் பணிநீக்கம் செய்யப்பட்ட, கவரவலை தோட்ட தொழிலாளர்களின் சத்தியாகிரக போராட்டம் தொடர்பில், ஹட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி காரியாலயத்தில், பேச்சு வார்த்தை ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகணேசன், பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், பணி இடைநிறுத்தம் செய்யபட்ட 8 தொழிலாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்

தோட்ட முகாமையாளர், தனது சட்டத்தரணியுடன் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

ஹட்டன் பொலிஸ்நிலைய தலைமை அதிகாரி தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது, பணி இடை நிறுத்தம் செய்யபட்ட 8 தொழிலாளர்களும் இன்னும் இரண்டு நாட்களில் பின்னர் தோட்ட தலைமை காரியாலயத்தில் இருந்து வரும் பணிப்புரைக்கமைய பணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள், அதுவரை இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும், என தோட்ட முகாமையாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களும் மீண்டும் பணிக்கு செல்லும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.