
பிள்ளைகளுக்கான பாடசாலை அனுமதியை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்
தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்களின் பிள்ளைகளை அந்தந்த பாடசாலைகளிலேயே அனுமதிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றுவியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய பாடசாலை ஆசிரியர் – பிள்ளைகள் ஒன்றியம் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில், நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களும் பணியாளர்களும் தங்களது பிள்ளைகளுடன் கலந்துகொண்டனர்.
தேசிய பாடசாலைகளில் மூன்று வருட சேவையை நிறைவு செய்த பணியாளர்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் சேர்ப்பதற்கான முன்னுரிமை மற்றும் சலுகை நடைமுறையில் இருந்தது.
எனினும், எவ்வித காரணமும் இன்றி 2025 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், தமக்கு முறையான தீர்வு வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது பிரச்சினைக்கு எழுத்துப்பூர்வமான தீர்வை வழங்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து, பணியாளர்கள் தமது பிள்ளைகளுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
