இலங்கையின் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு – தேயிலை சபை தகவல்

இலங்கையின் தேயிலை உற்பத்தி 2026 ஆம் ஆண்டில் 10 வீதம் முதல் 12 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் டபிள்யூ.எல்.பி.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி காரணமாக சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி இழப்பு ஏற்பட்ட போதிலும், சாதகமான காலநிலை தொடருமானால் 300 மில்லியன் கிலோகிராம் என்ற வருடாந்த இலக்கை அடைய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டில் நாட்டின் தேயிலை உற்பத்தி 264.12 மில்லியன் கிலோகிராமாக அதிகரித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டுடன் (262.69 மில்லியன் கிலோ) ஒப்பிடும்போது 1.43 மில்லியன் கிலோகிராம் உயர்வாகும். அரசாங்கம் வழங்கிய உர மானியமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

உற்பத்தி அதிகரித்த போதிலும், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு, தேயிலை தோட்டங்களில் மறுநடுகை செய்வதில் நிலவும் தாமதம், தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற முக்கிய சவால்கள் இன்னும் நீடிப்பதாக தேயிலை சபை தலைவர் தெரிவித்தார்:

இந்த காரணிகளால் 2025 இன் மூன்றாம் காலாண்டில் தேயிலை உற்பத்தியில் 8.1 வீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.