மட்டக்களப்பில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஏழரை பவுண் தங்க நகை கொள்ளை!
மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில், பேருந்திற்காக காத்திருந்த வயோதிப பெண் ஒருவருக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரின் ஏழரைப் பவுண் தங்க ஆபரணங்களை, யுவதி ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளதுடன், மயக்கமடைந்த வயோதிப பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 64 வயதான குறித்த வயோதிப் பெண், பெரிய கல்லாற்றில் இருந்து மட்டக்களப்பு புதூர் பிரதேசத்திலுள்ள அவரது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக, சம்பவ தினமான நேற்று பகல் 11.00 மணிக்கு பேருந்தில் பயணித்து, மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் வந்தடைந்துள்ளார்.
அதன்பின், அங்கிருந்து புதூருக்கு செல்லும் பேருந்திற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
இதன்போது, மோட்டர் சைக்கிள் ஒன்றில் இளைஞர் ஒருவருடன் அங்கு வந்த யுவதி ஒருவர், பேருந்துக்காக காத்திருந்த குறித்த வயோதிப பெண்ணுக்கு அருகில் சென்று அமர்ந்து பேச்சுக் கொடுத்துள்ளார்.
அதன்பின், “தங்க ஆபரணங்களை கழற்றி கைப்பையில் வையுங்கள், இங்கு திருடர்கள் அதிகம், உங்களது நகைகளையும் திருடிக்கொண்டு சென்று விடுவார்கள்” என அறிவுரை கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து தன்னிடமிருந்த குளிர்பானம் ஒன்றை எடுத்து, குறித்த வயோதிபப் பெண்ணிடம் கொடுத்து குடிக்குமாறு கூறியுள்ளார்.
குறித்த யுவதி மிகவும் அக்கறையாக பேசி குளிர்பானத்தை குடிக்குமாறு பல முறை தெரிவிக்கவும், குறித்த வயோதிபப்பெண்ணும் அதை வாங்கி அருந்தியுள்ளார்.
குளிர்பானத்தை குடித்த அவர், சற்று நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.
உடனே அந்த யுவதி, வயோதிப் பெண்ணின் ஏழரை பவுண் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தன்னுடன் வந்த இளைஞனுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில், மாலை 5.30 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு சென்ற பெண் ஒருவர், அங்கு வயோதிப பெண் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டு அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதன்பின் குறித்த வயோதிபப்பெண் உடனடியாக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
