2026 வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு வேண்டுகோள்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்யும் பணிகள் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்துப் பிரஜைகளும் தமது பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம்’ (PAFFREL) கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2027 ஜனவரி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 வயது பூர்த்தியடையும் இளம் பிரஜைகள், தத்தமது பிரதேச கிராம அலுவலர் மூலம் YC படிவத்தைச் சமர்ப்பித்துத் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த வருட வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத, ஆனால் தற்போது வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் ER படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, “தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது அவசியமானது. இது ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை உரிமை மாத்திரமன்றி, ஒரு சிவில் கடமையுமாகும்.

எனவே, பொது மக்கள் இது குறித்துத் தமது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலதிக விபரங்களுக்குத் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.elections.gov.lk என்ற முகவரிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.