இலங்கை – பின்லாந்து இடையே அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

இலங்கை மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே அரசியல் ஆலோசனை பொறிமுறையொன்றை (Political Consultation Mechanism) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே 1954ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 72 ஆவது ஆண்டு நிறைவு இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

கடந்த காலங்களில் அரசியல், பொருளாதாரம், சமூக-கலாசாரம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் தனிநபர் உறவுகள் மூலம் வலுப்பெற்ற இரு நாட்டு உறவானது, தற்போது ஒரு துடிப்பான பங்களிப்பாக வளர்ந்துள்ளது.

இந்தநிலையில், அரசியல், பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதையும் வலுப்படுத்துவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்தப் பரிந்துரைக்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.