14 ஆவது தடவையாக கிராமி விருதை வென்ற லேடி காகா

68ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில் லேடி காகா தனது “அப்ரகாடாப்ரா” (Abracadabra) பாடலுக்காக சிறந்த நடன பொப் பாடல் (Best Dance Pop Song) விருதை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா, லேடி காகாவிற்கு மிகவும் வெற்றிகரமான இரவாக அமைந்தது.

அவரது சமீபத்திய ஆல்பமான “மேஹெம்” (Mayhem), சிறந்த பொப் குரல் ஆல்பத்திற்கான (Best Pop Vocal Album) விருதையும் வென்றது.

லேடி காகா தனது மேடை நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருந்ததால், தயாரிப்பாளர்கள் எண்ட்ரூ வாட் மற்றும் சர்க்யூட் ஆகியோர் அவர் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டனர்.

ஆண்டுக்கான சிறந்த பாடல் (Song of the Year) மற்றும் ஆண்டுக்கான சிறந்த பதிவு (Record of the Year) ஆகிய முக்கிய பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட தனது “அப்ரகாடாப்ரா” பாடலை, ஒரு ரொக் பதிப்பாக (Rock version) மேடையில் பாடி அவர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம், லேடி காகா வென்றுள்ள மொத்த கிராமி விருதுகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.