குடும்பத்தின் கண்ணீருக்குக் கிடைத்தது நீதி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு குடியேற்ற தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டிருந்த 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ் மற்றும் அவரது தந்தையை உடனடியாக விடுதலை செய்யுமாறு நீதிபதி ஒருவர் நேற்று சனிக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, 2026 ஜனவரி 20 ஆம் திகதியன்று, மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் பகுதியில், லியாம் தனது தந்தையுடன் பாடசாலையில் இருந்து வீடு திரும்பியபோது குடியேற்ற அமுலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, சிறுவன் லியாம் தாம் அணிந்திருந்த ‘முயல்’ வடிவத் தொப்பி மற்றும் ‘ஸ்பைடர்மேன்’ பாடசாலை பையுடன் அழுதபடி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அவரை விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி, அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் மற்றும் அரசியலமைப்பை அரசாங்கம் நிர்வாகம் மறந்துவிட்டதாகக் தமது தீர்ப்பின்போது தெரிவித்தார்.

அத்துடன், “இயேசு அழுதார்” (Jesus Wept) என்ற பைபிள் வசனத்தையும் அவர் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளார்.

லியாமின் குடும்பத்தினர் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஏற்கனவே தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களைக் கைது செய்தமை சட்டவிரோதமானது என அவர்களது சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

தற்போது டெக்சாஸில் உள்ள ‘டில்லி’ தடுப்பு முகாமில் உள்ள லியாம், தனது தாயைப் பிரிந்து மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.